மதுரை
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் திருப்பரங்குன்ற மலை வழக்கு 3 ஆம் நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி (ஆடு, கோழிகள் பலி) கொடுக்க கூடாது என இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட பாதுகாப்பு அளிக்கப்பட்டுமலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக்கூடாது என்று போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட்டது.
இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மனுவில், “திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்க கோரியும், சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
நேற்று இந்த மனுக்கள் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி நிஷா பானு,
“திருப்பரங்குன்றம் மலை தொடர்பான சர்ச்சையில், அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதி, அதை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்கள் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”
என்று கருத்து தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தார்
நீதிபதி ஸ்ரீமதி,
“திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும். சிக்கந்தர் மலை அல்லது சமணர் குன்றம் என்று அழைக்கக்கூடாது. ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகளின் போது கந்தூரி விலங்குகளை பலியிடுதல் மற்றும் பிரார்த்தனை செய்யும் நடைமுறையை உறுதி செய்ய தர்கா நிர்வாகம் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சந்தனக்கூடு திருவிழாவை நடத்தலாம்.
காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு மாலை 6 மணிக்குப் பிறகு யாரையும் அனுமதிக்கக் கூடாது . எனவே அங்கு மின்சார இணைப்பு தேவையில்லை. சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் கழிப்பறை வழங்கப்பட்டால் மலை சேதமடையும், எனவே அவை வழங்கப்படாது. திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய தொல்லியல்துறையை அனுமதிக்க வேண்டும்”
என்ற மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
எனவே இந்த வழங்கு 3வது நீதிபதி விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.