மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
இந்திரனுக்கு அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்தனர். ஒருசமயம், அர்ஜுனன் இந்திரலோகம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அங்கு சென்ற தன் மகனிடம் இந்திரன், “அர்ஜுனா. கடலுக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருக்கிறது. அங்கே, மூன்றுகோடி அசுரர்கள் வசிக்கின்றனர். அவர்கள் 14 லோகங்களிலும் உள்ள நல்லவர்களை வதைத்து வருகின்றனர். நீ அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழிக்க வேண்டும்” என்றான். அர்ஜுனனும் போருக்குச் சென்றான். அவர்களை அழிப்பது அவ்வளவு சுலபமாகஇல்லை. கொல்லப்பட்ட அசுரர்கள் மீண்டும் எழுந்து நின்றனர்.
அப்போது வானத்தில் இருந்து அர்ஜுனனின் காதில் ஒலித்த அசரிரீ, “அந்த அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ கொல்ல முடியும்” என்றது. உடனே அர்ஜுனன், தோற்று ஓடுவது போல நடித்தான். அச்சமயத்தில் அசுரர்கள் கேலி செய்ய, அர்ஜுனன் தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை எய்து அவர்களைக் கொன்று விட்டான். இந்த வீரச்செயலைப் பாராட்டிய இந்திரன், அதற்கு கைமாறாக தான் வணங்கிவந்த கோபால சுவாமியின் சிலையை அர்ஜூனனுக்கு வழங்கினான்.
சிலநாட்கள் கழித்து, அர்ஜூனனின் கனவில் தோன்றிய கண்ணபிரான், “இந்திரனால் உனக்கு வழங்கப்பட்ட என் சிலையை கங்கைநதியில் இடு” என்றார். அர்ஜுனனும் அப்படியே செய்தான். அப்போது, கங்கையில் நீராடச் சென்றிருந்த, தென்பாண்டி நாட்டை ஆட்சிசெய்த ஸ்ரீபதி மன்னன் மிதந்து வந்த சிலையை எடுத்து வந்தான். அதை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அழகிய இராஜகோபாலன் என பெயர் சூட்டினான்.
இந்த கோயிலில் விஷ்ணுப்பிரியன் என்ற அர்ச்சகர் பூஜை செய்துவந்தார். அவருக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தன. எனவே தமக்கு பின் சுவாமிக்கு பணிவிடை செய்ய ஆண் குழந்தை வேண்டும் என கோபாலனிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் பின்னரும் அவரது மனைவி கலாவதிக்கு பெண் குழந்தையே பிறந்தது. இதனால் கோபமடைந்த விஷ்ணுப் பிரியன், ஆரத்தி தட்டினை சுவாமி மீது வீசினார்.
இதனால் சுவாமியின் மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்று பார்த்தபோது பிறந்திருந்த பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறியிருந்தது. வெலவெலத்துப்போன அர்ச்சகர் கோயிலுக்கு வந்து சுவாமியிடம் வருந்தினார். அப்போது கோபாலசுவாமி, பாமா ருக்மணி சமேதராய் காட்சியளித்தார். இதனால் சுவாமிக்கு “பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார்” என்ற பெயர் ஏற்பட்டது.
மூலஸ்தானத்தில் வேதநாராயணப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். உள்மண்டபத்தில் இவர் வேதவல்லி தாயார், குமுதவல்லி தாயார்களுடன் காட்சியளிக்கிறார். கோயிலின் கோபுரத்தில் அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். இக்கோயில் தமிழக சிற்பக்கலைப் பாணியுடன், மதுரா கிருஷ்ணர் கோயில் பாணியும் இணைத்து கட்டப்பட்டுள்ளது. இது பழமையான கோயிலாகும்.
செண்பகவிநாயகர் சன்னதி, தசாவதார காட்சி சன்னதிகளுடன், பன்னிரு ஆழ்வார்கள், பரமபதநாதர், ஆஞ்சநேயர் சன்னதிளும் உள்ளன.
திருவிழா:
பங்குனி பிரமோற்ஸவம், புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை, வைகுண்ட ஏகாதசி.
கோரிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்