ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். பாக்கம். திருநின்றவூர்

கயிலாயத்தில் சிவபார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. பூமியை சமநிலைப்படுத்தும் நோக்கில் சிவன், அகத்திய முனிவரை தென்னகத்திற்குப் புறப்பட்டுச் செல்ல உத்தரவிட்டார்.

வரும் வழியில், அவர் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு வழிபடப்பட்ட லிங்கங்களில் ஒன்றே திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர். (இது ஈசனை தேடி… குழுவின் பதிவு)இவருக்கு சோழமன்னன் முதலாம் ராஜேந்திரன் கி.பி.1022ல் திருப்பணி செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் ஈக்கோடு கோட்டத்தில் புலியூர் நாட்டு சதுர்வேதி மங்கலம் என இப்பகுதியை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் (பீடம்) தாமரை இதழ் வடிவமாக காட்சியளிப்பது அதிசயமாகும். இவரை வழிபட்டவருக்கு குபேர சம்பத்து கிடைக்கும். அகத்திய மகரிஷி பூஜித்த மூர்த்தி என்பதால், பாவம் நீங்கி புண்ணியம் பெருகும்.

தலவிருட்சமாக கல்லால மரம் இருப்பதால் இங்கு வழிபடுவது சிறப்பு.

தட்சிணாமூர்த்தி, தனது சீடர்களான சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்து உபதேசம் செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இதை குரு ஸ்தலம் என்றும் சொல்கின்றனர்.

ஆயிரம் ஆண்டு பழைமையானது இக்கோயில்.வியாழனன்று, தல மரத்தின் முன் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்குவதோடு குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை