நெல்லை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில், மாநகராட்சி சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கு காவல்துறை சார்பில் ‘மரியாதைக்குரிய காவலர்’ வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாகி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும் இரவுபகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நெல்லை காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மாநகரத்தயும், மாநர மக்களையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து வரும் பணியாளர்களின்  அயராத உழைப்பின் மரியாதைக்குரிய அடையாளமாக ஊக்கும்விக்கும் நோக்கிலும், அவர்களை கவுரவப்படுத்தும் வகையில்,  திருநெல்வேலி காவல்துறையினர், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

இதுவரை எந்தவொரு பகுதியில் இதுபோன்ற கவுரவிப்பு சம்பவம் நடைபெறாத நிலையில், நெல்லை காவல்துறை யினர் முதன்முறையாக ‘மரியாதைக்குரிய காவலர்’ (‘Guard of Honor’) மரியாதை செய்து தமிழக காவல்துறை யினருக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்களும், காவல்துறையினரின் மரியாதையால் நெகிழ்ந்துபோய் உள்ளனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மரியாதை காப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் காவலர்களின் மரியாதை காப்பு அணிவகுப்பை மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் பெற்றுக்கொண்டார். இதில் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த மரியாதை காப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி ஆணையர் கண்ணன்  உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது போலீஸ் துணை கமிஷனர் சரவணன் கூறும்போது; கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காலகட்டத்தில் உன்னதமான பணியாற்றிவரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி மரியாதை காப்பு அணிவகுப்பு நடத்தப்பட்டது.  மேலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காக சேவை செய்யும் உங்களுக்கு பின் நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த மரியாதை காப்பு அணிவகுப்பு என அவர் தெரிவித்தார்.