விஜயவாடா :

நிதி நெருக்கடி காரணமாக  ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் யெஸ் வங்கி, தங்களது கணக்கில் உள்ள பணத்தையெடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி “நோ” சொல்லி கட்டுப்பாடு விதித்திருக்கிறது. .

பல்வேறு நகரங்களில்  உள்ள யெஸ்  வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளை கேட்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, திருப்பதி தேவஸ்தானம், இந்த வங்கியில் முதலீடு செய்துவைத்திருந்த ரூ. 1300 கோடி பணத்தை சிலமாதங்களுக்கு முன் “ரைட்டாக”  எடுத்து வேறொரு வங்கியில் வரவு வைத்த சம்பவம் தற்போது தெரியவந்திருக்கிறது.

இது தெரிந்தே நடந்ததா அல்லது கோவிந்தனின் கருணையால் நடந்ததா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருக்கும் போது திருப்பதி தேவஸ்தானம்,  பணத்தை முதலீடு செய்ய யெஸ் பேங்க் உள்ளிட்ட நான்கு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தது.

கடந்த 2019 மே மாதம் முதல்வர் பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரான சுப்பா ரெட்டியை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை பொறுப்பில் அமர்த்தினார்.

வங்கி செயல்பாடுகளை ஆய்வு செய்த சுப்பா ரெட்டி, யெஸ் வங்கியின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்திருந்தார், பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன், தேவஸ்தானத்திற்கு சொந்தமான ரூ. 1300 கோடியை வழித்தெடுத்து வேறு வங்கிக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார். 

தற்போது, சிக்கலில் சிக்கியிருக்கும் யெஸ் வங்கியிடமிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் பணம் தப்பியிருந்தாலும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 30 நாட்களில் தங்களுக்கும் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். 

 

நன்றி : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்