திருப்பதி:

திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக மலைஅடிவாரத்தில் 384 ஓய்வு அறைகள் கட்ட முடிவு செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறங்காவல் குழு தலைவர் சுதாகர் யாதவ்  செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். அதன்படி,

திருப்பதி ஏழுமலையான்  பக்தர்களுக்காக 67.29 கோடி ரூபாய் செலவில்  384 அறைகளுடன் கூடிய வளாகம் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கட்டப்பட உள்ளது.

திருப்பதி மலையில் சர்வ தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்காக  புதிய வரிசைகள் அமைக்க 17.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமலையில் ஸ்மார்ட் டேட்டா சென்டர் அமைப்பதற்கு 2.63 கோடி ரூபாயும்,  திருப்பதியில் ஹார்டுவேர் டேட்டா சென்டர் அமைக்க 1.97 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவிலை சுற்றி பக்தர்களின் பாதுகாப்புக்காக 1,050  கண்காணிப்பு கேமராக்கள் 15.79 கோடி ரூபாய் செலவில் அமைப்படவுள்ளது.

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுரம், கண்ணாடி மண்டபம், ஆஞ்சநேயர் சன்னதி, புஷ்கரணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்காக 27.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டுமானப் பணிக்கு இந்த மாதம் 31-ம் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜை செய்கிறார்.

142 கோடி ரூபாயில் அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் 4 கட்டங்களாக ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.