திருப்பதி:
திருப்பதி லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமலை திருப்பதி ஏழுமைலயான் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், சில தளர்வுகளை அளித்துள்ள மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், திருப்பதி ஏழுமைலயான் கோயில் எப்போது பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் என பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, கொரோனா கஷ்ட காலம் முடிந்து ஏழுமலையான் கோவில் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி இப்போது உறுதியாக கூற இயலாது என்றார்.

அதேசமயம், பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை பாதி விலையில் அதாவது ரூ.50க்கு பதிலாக ரூ.25க்கு நாளை மறுநாள் முதல் ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களிலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

லட்டு பிரசாதம் மொத்தமாக தேவைப்படும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத்தை 9849575952 என்ற செல்போன் எண்ணிலும், லட்டு தயாரிப்பு அதிகாரியை 9701092777 எண்ணிலும் தொடர்பு கொண்டு லட்டுகளை மொத்தமாக ஆர்டர் செய்து எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழுமலையானுக்கு பக்தர்கள் ஈ-உண்டி மூலம் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஈ-உண்டி மூலம் ஏழுமலையானுக்கு ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். எனவே தமிழகத்திலும் லட்டு விற்பனைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அப்போது கூறினார்.