தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 7ந்தேதி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகிற 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் கீதா ஜீவன் கூறிய நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா 7ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருகை தருவார்கள். மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கும்பாபிசேகம் நடைபெறும் நாளான, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.