மதுரை: திருச்செந்தூர் சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்வில் பொதுமக்களை அனுமதிக்க கூடாது; அனைத்து தொலைக்காட்சிகளும் நிகழ்வை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்!” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுஉள்ளது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா  15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 20-ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 21-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஆனால்,  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாதுஎன்றும், கோவில் பிரகாரத்திலேயே நடைபெறும், அதுபோல திருக்கல்யாணம் வைபவத்துக்கும்  பக்தர்களுக்கு அனுமதியில்லை, சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், இந்தாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக சூரசம்ஹாரமும், திருக்கால்யாணமும் கோயில் உள்ளே உள்ள மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும் என்றும்,  சூரசம்ஹாரம் கடற்கரையிலும், திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்திலும் பாரம்பரிய வழக்கப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் வாதிடுகையில், சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும் என்றும்  திருக்கல்யாணம் 108 மகாதேவர் சன்னதி முன்பும் நடைபெறும் என்றார். ஆனால், பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.