சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி,  தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. இதையொட்டி கனரக வாகனங்கள் இயக்க காவல்துறை தடை விதித்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.

அதுபோல தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சென்னை – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. ஜூலை 6-ம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் ரயில், திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்குச் செல்லும். மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. அதற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,   ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  ம்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்றைய தினம் தூத்துக்குடி மவாட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும்  கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள   தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருகை தருவார்கள். மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதையொட்டி,  ரயில்வே சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், சிறப்பு பேருந்துகளை அறிவித்து உள்ளது.  திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி  இன்றுமுதல்  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஜூலை 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கீழ்கண்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை, திருச்சி, புதுச்சேரி. கும்பகோணம், சேலம், பெங்களூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு இயக்கப்பட உள்ளது.

சிறப்பு ரயில் விவரம்:

திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சென்னை – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. ஜூலை 6-ம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் ரயில், திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்குச் செல்லும். மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு  ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

கனரக வாகனங்களுக்கு தடை:

 திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாட்களான ஜூலை 5 (இன்று), ஜூலை 6 மற்றும் ஜூலை 7 ஆகிய மூன்று நாட்களும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் மற்றும் திருச்செந்தூர் வழியாக செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் திருச்செந்தூர் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தல் அதேபோல் கன்னியாகுமரி, உவரி, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து வேறு மாற்று பாதையில் செல்ல காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.