பரேலி, உத்தரப்பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலி நகரில் செய்யப்படும் ஜும்கா என்னும் அடுக்கு ஜிமிக்கியின் சிலை ஒன்று அந்நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்கள் வினோதமான நகைகளுக்குப் புகழ் பெற்றவை ஆகும். இந்த வகை நகைகளை அந்த காலத்தில் இந்தித் திரைப்படங்களில் நடிகைகள் அணிந்திருப்பதைக் காண முடியும். குறிப்பாக 1967 ஆம் வருடம் வெளியான மேரா சாயா என்னும் இந்தித் திரைப்படத்தில் நமது தாத்தாக்கள் கால கனவுக்கன்னி சாதனா ஒரு வகை அடுக்கு ஜிமிக்கியை அணிந்து வருவார்.
அந்த ஜிமிக்கிக்கு ஜும்கா எனப் பெயர் ஆகும். இந்த நகை உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிறு நகரமான பரேலியில் செய்யப்படுகிரது. மேரா சாயா திரைப்படத்தில் சாதனா பாடும் பாட்டில் “ஜும்கா கிரா ரே, பரேலி கா பஜார் மேன் (ஜும்கா விழுந்து விட்டது. பரேலி கடைத் தெருவில்) என வரிகள் உண்டு.
அந்த பாடல் வரிகளைத் தவிர இந்நகருக்கு ஜும்கா குறித்த எந்த புகழும் இதுவரை கிடைக்காமல் இருந்தது. தற்போது பரேலி நகரில் இந்த ஜுமகாவின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள கலைஞர் வடித்த இந்த பித்தளை சிற்பம் 272 கிலோ எடையுள்ளதாகும். அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இந்த சிலை 14 அடி உயரக் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரசகேரா ரவுண்டானாவில் இந்த சிலை அமைந்துள்ள இடத்துக்கு ஜும்கா திராகா எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி இந்த சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார், “மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஒரு முறை கடைத்தெருவில் விழுந்த சாதனாவின் ஜும்கா கிடைத்ததா எனக் கேட்டார். இப்போது பரேலி நகரில் அந்த ஜும்கா கிடைத்து விட்டது என அந்த மூத்த தலைவரிடம் நான கூற முடியும்.” என உரையாற்றி உள்ளார்.
இது குறித்து பரேலி நகர காவல்துறை தலைமை காவல் அதிகாரி ராஜேஷ் பாண்டே தனது முகநூலில், “நானும் பல வருடங்களாக இந்த ஜும்காவை தேடி வந்தேன். அத்துடன் எனது சக அதிகாரிகளையும் தேடச் சொன்னேன். இப்போது அது விழுந்த அதே பரேலி நகரில் கிடைத்து விட்டது என அறிவிக்கிறேன்” என நகைச்சுவையாகப் பதிவு செய்துள்ளார்.