பெங்களூரு,

ர்நாடக மாநில சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெங்களூரு வருகை தந்துள்ளார்.

இன்று சட்டமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக திப்பு சுல்தான் போராடி வரலாற்று சிறப்புமிக்க மரணத்தை தழுவினார் என்று புகழாரம் சூட்டினார்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக  கர்நாடக மாநிலத்துக்கு நேற்று வருகை தந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பெங்களூரு நகரை உருவாக்கிய கெம்ப்பே கவுடாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி,  அதைத்தொடர்ந்து பெங்களூரு அறிவியல் ஆய்வகத்தில் அறிவிலயலாளர்கள் பங்கேற்கும் வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்த கொண்டார்.

அதைத்தொடர்ந்து இன்று நடைபெறும், கர்நாடக மாநில சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.

விதான் சவுதா என்று அழைக்கப்படும் கர்நாடக சட்டமன்றத்தின்  60வது ஆண்டு விழாவுக்கு வந்த அவரை கர்நாடக முதல்வர் சித்தராமையா மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து சட்டசபை சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவருக்கு மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்களிடையே ஜனாதிபதி கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது, திப்பு சுல்தான்  பிரிட்டிசாருக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்தார். அவரது மரணம் வரலாற்று மரணம் என்று புகழாரம் சூட்டினார்.

கடந்த 18ம் நூற்றாண்டின்போது நமது நாடு பிரிட்டிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அப்போது கர்நாடகாவை ஆட்சி செய்து வந்த முஸ்லிம் ஆட்சியாளரான திப்புசுல்தான், பிரிட்டிசாருக்கு எதிராக போரிட்டு வீர  மரணம் அடைந்தார். அவரது மரணம் வரலாற்று சிறப்புமிக்க மரணம். மைசூர் ராக்கெட்டுகளின் மேம்பாட்டிலும் அவர் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார் என்றும் ஜனாதிபதி கோவிந்த் கூறினார்.

மேலும், முன்னாள் கர்நாடக  முதல்வர்களான   எஸ். நிஜ லிங்கப்பா, டி. தேவராஜ் உர்ஸ், பி.டி. ஜட்டி, ராம கிருஷ்ணா ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, வீரேந்திர பாட்டீல், எஸ்எம் கிருஷ்ணா ஆகியோரின் பங்களிப்பு குறித்தும், அவர்களை கவுரவித்தும் பேசினார்.

ஆனால், முன்னாள் முதல்வர் மற்றும் பிரதமர் தேவகவுடா குறித்து அவர் பேச மறந்துவிட்டார்.  இதுகுறித்து, சில எம்எல்ஏக்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

அதற்கு, கோவிந்த், “ஆம். கவுடாவின் பங்களிப்பை நான் நினைவில் வைத்திருக்கிறேன். தேவகவுடா முன்னாள் பிரதம மந்திரி மட்டுமல்ல என்னுடைய ஒரு மிகச் சிறந்த நல்ல நண்பர்” என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பற்றி கேட்டபோது, நான் சில பெயர்களை தேர்வு செய்தேன் மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை என்றும் கூறினார்.  மேலும், விதான சௌதா கட்டிடத்தை “கர்நாடகாவில் பொது சேவை வரலாற்றில் ஒரு நினைவுச்சின்னம்” என்றும் கூறினார்.

திப்புசுல்தான் விழாவுக்கு கர்நாடக பாரதியஜனதா கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், பாரதியஜனதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,, காங்கிரஸ் தலைமை யிலான ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக சட்டசபையில் வந்து, அரசு விழாவாக கொண்டாடப்படும் திப்புசுல்தான் குறித்து புகழ்ந்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திப்புசுல்தான் ஜெயந்தி  அரசு விழா அழைப்பிதழில் தங்களது பெயர்களை சேர்க்ககூடாது என கர்நாடக பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இதற்  பதிலாக டுவிட் செய்திருந்த  மாநில அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, “திப்பு சுல்தான் ஜெயந்தி” குறித்து கருத்து தெரிவித்த பாஜ தலைவர்களுக்கு,   “மிருகத்தனமான கொலைகாரன் என அறியப்படும் ஒரு நபரை மகிமைப்படுத்தும் ஒரு வெட்கக்கேடான நிகழ்விற்கு” அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திப்புசுல்தான் குறித்து உயர்வாக பேசியிருப்பது கர்நாடக பாஜவினரிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.