புதுடெல்லி:
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி மூன்று மாதங்களுக்கு மட்டுமே பலன் தரும் என்று லான்செட் மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவிக்கையில், கோவிஷீல்டு தடுப்பூசி மூன்று மாதங்களுக்கு மட்டுமே பலன் தரும் என்று லான்செட் மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும், லான்செட் ஆய்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பூஸ்டர் டோஸை அனுமதிக்க வேண்டும்; ஃபைசர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கும் அனுமதியளிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர்  கூறியுள்ளார்.