டெல்லி: வெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் டோஸை செலுத்திக்கொள்ளலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இந்தியாவிலும் தினசரி 50லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு, 84நாட்கள் கழித்தே 2வது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அவசர தேவையைக்கருதி,  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா சார்பில் 100 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த விளையாட்டு வீரர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும் அங்கு பணிபுரிய செல்லும் ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள 84 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால், அவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது,   மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை 28 நாட்கள் இடைவெளிவிட்டு செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.