சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் நடப்பு செமஸ்டர் கட்டணம் கட்ட செப்டம்பர் 19-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
தேர்வு கட்டணம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மாதம் (ஆகஸ்டு) வெளியிட்ட அறிவிப்பில், மாணாக்கர்கள் “செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்டு 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3-ந்தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5-ந்தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என கூறியிருந்தது.
மேலும், கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெயர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7-ந்தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்” என்றும் எச்சரித்து இருந்தது.
இது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதையடுத்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, அண்ணா பல்கலைக்கழகம், தேர்வு கட்டணம் கட்ட மேலும் அவகாசம் வழங்குவதாக உறுதி அளித்தது.
இந்தநிலையில், இன்று கால அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. அதில், பி.இ., செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்டம்பர் 19ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.