மத்தியப் பிரதேசத்தில் பெண் புலியை ஆண் புலி ஒன்று அடித்து கொன்று தின்ற சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

tiger

இந்தியாவில் அதிக அளவிலான புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் வசித்து வருகின்றன. இந்த பூங்காவில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது, ஆங்கங்கே புலியின் எலும்புகள் ரத்தக் கரையுடன் சிதறிக்கிடைந்ததை பார்த்தனர். இதையடுத்து, வன காவலர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் கொல்லப்பட்டது பெண் புலி என்றும், அதனை காட்டில் வசிக்கும் ஆண் புலி ஒன்று கொன்று தின்றுள்ளது எனவும் கண்டறிந்தனர். வனத்தில் நடைபெற்ற இந்த விநோத சம்பவம் வன அலுவலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.

உலக அளவில் பார்க்கையில் இதுவரை புலியின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்ததில் ஒரு புலி மற்றொரு புலியை அடித்து கொன்றது இதுவே முதல் முறை என்றும், இது முற்றிலும் விநோதமானது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது புலியின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்த சம்பவம் புலி இனத்தின் அழிவிற்கான ஒரு தொடக்கமாக இருக்க கூடும் என்றும் வன ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, பெண் புலியை கொன்று தின்ற ஆண் புலிக்கு போதிய உணவுகள் வழங்கப்பட்டு உள்ளன. இருந்தும் ஆண் புலி, பெண் புலியை கொன்று தின்றுள்ளது. இருப்பினும், இதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.