டில்லி

காங்கிரஸ் கட்சி தாம் வரும் மக்களவை தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் மோடியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது.

பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா என்பது பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டமாகும்.    இந்த திட்டத்தினால் விவசாயிகள் பெரிதும் பலனடைந்துள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.   அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த காப்பீட்டு திட்டத்தினால் இதுவரை எந்த ஒரு விவசாயியும் பலன் அடையவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவான கிசான் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் நானா படோல் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் நாடெங்கும் உள்ள விவசாயிகளை சந்தித்து பிரதமரின் பயிர் காப்பிட்டு திட்டத்தினால் பயன் அடைந்துள்ள விவசாயிகள் பற்றிக் கேட்டறிந்தோம்.

ஆனால் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ள ஒரு விவசாயியைக் கூட எங்களால் காண முடியவில்லை.     ஆகவே இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தினால் ஒரு விவசாயி கூட பலன் அடையவில்லை என்பதும் தனியார் காப்பீட்டு நிறுவங்கள் மட்டுமே பலன் அடைந்துள்ளது தெளிவாக தெரிந்துள்ளது.

ஆகவே வர உள்ள 2019 மக்களவையில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பிரதமர் மோடி அறிவித்த பயிர் காப்பிட்டு திட்டம் குறித்து விரிவான ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்படும்.   அத்துடன் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். ” என தெரிவித்துள்ளார்.