சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் ; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

இந்தியாவின் முதல் Bolliger & Mabillard இன்வெர்ட்டட் ரோலர் கோஸ்டரான ‘தஞ்சோரா’ (Tanjora) பலமுறை தலைகீழாக சுழன்று சாகச அனுபவத்தை தருகிறது. இந்த வொண்டர்லா. பொழுதுபோக்கு பூங்காவானது, 64 ஏக்கர் பரப்பளவில், ஓ.எம்.ஆர். சாலை திருப்போரூர் அருகே அமைந்துள்ளது. இந்த புதிய வொண்டர்லா அதிரடி ரைடுகள், மெதுவான ரம்மியமான சவாரி என தனித்துவமான அம்சங்களுடன் மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த புதிய நீர்பூங்கா, சென்னையின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்திசெய்யும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. இங்கு 43க்கும் மேற்பட்ட ரைடுகள் உள்ளன. இதில் அதிவேக ரோலர் கோஸ்டர்கள், சுழலும் சவாரிகள், குழந்தைகளுக்கான மென்மையான ரைடுகள் மற்றும் பெரிய வாட்டர் ஸ்லைடுகள் என அனைத்தும் அடங்கும்.
குறிப்பாக, இந்தியாவின் முதல் Bolliger & Mabillard இன்வெர்ட்டட் ரோலர் கோஸ்டரான ‘தஞ்சோரா’ (Tanjora) பலமுறை தலைகீழாக சுழன்று சாகச அனுபவத்தை தருகிறது. மேலும், 50 மீட்டர் உயரத்தில் இருக்கும் ‘ஸ்பின் மில்’ (Spin Mill) என்ற ரைடு, இந்தியாவில் உள்ள மிக உயரமான சுழலும் ரைடு ஆகும். இது மக்களை செங்குத்தான வளையங்களில் 4.5G விசையுடன் சுழற்றி அதிர வைக்கிறது.
மெதுவான மற்றும் ரம்மியமான அனுபவத்தை விரும்புவோருக்காக, ‘ஸ்கை ரயில்’ (Sky Rail) என்ற 540 மீ. உயரமான மோனோரயில் வசதி உள்ளது. இது பூங்காவின் மேல் பகுதியில் வலம் வந்து, பூங்காவின் அழகிய காட்சிகளை அமர்ந்து ரசிக்க உதவுகிறது. சில ரைடுகள் இன்னும் கட்டுமானத்திலும், இறுதி சோதனையிலும் இருந்தாலும், பூங்கா முழுவதும் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இந்தப் பூங்காவைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் சிட்டிலப்பள்ளி, தலைமை இயக்க அதிகாரி தீரன் சௌதரி, சென்னை பூங்கா தலைவர் வைசாக் ரவீந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
டிக்கெட் கட்டணம் மற்றும் தள்ளுபடி
பூங்காவிற்கான குறைந்த பட்ச டிக்கெட் விலை ரூ1,489. முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி உண்டு. அடையாள அட்டை வைத்திருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு 20% சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பொழுது போக்கு பூங்காவை தொடங்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு அரசிடம் வொன்டர்லா கேளிக்கை பூங்காவை அமைப்பதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.