சென்னை

மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகப் பெய்த கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. சேலம் மாநகரில் கனமழையால் அன்னதானபட்டி, அம்பேத்கர் நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதோடு, சுரங்கப்பாதை வழியாக வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடி வெளியேற்றப்பட்டது. உபரி நீர் திறப்பால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கரையோர கிராமங்களுக்குத் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தற்போது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழக தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தவிர 2 நாட்களுக்குக் கேரளா மற்றும் கர்நாடக அரபிக்கடலோர் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.