டில்லி:
திருட்டு வீடியோ மற்றும் ல்அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை வதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கி வருகின்றன. இதை தடுக்க மத்திய மாநில அரசுகளிடம் திரைப்படத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சமீபத்தில்நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் வீடியோ பைரசி தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 1952ம் ஆண்டின் திரைப்பட சட்டப்பிரிவை திருத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்வது, பிரதி எடுப்பது ஆகிய குற்றங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, 10 லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும்.
இதற்காக சட்டத்திருத்த மசோதா தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தமிழகத்தின், தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு பதப்படுத்தல் தொழில் நுட்ப கல்லூரிக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.