டெல்லி:
கொரோனா நெருக்கடி காரணமாக, மத்தியஅரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட டிஏ நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தி வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான கடந்த மார்ச் மாதம் 14ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 17 சதவீதம் இருந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்ந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் என்றும், நடப்பு நிதியாண்டில் அரசுக்குக் கூடுதலாக ரூ.14 ஆயிரத்து 595 கோடி செலவாகும். இது ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் மத்தியஅரசு அறிவித்தது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் சிக்குண்டு இருப்பதால், மத்தியஅரசு ஊழியர்களுக்கு 3 தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட டிஏவை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தடுப்பு பணிகளுக்காக சுகாதாரத்துறைக்கு அதிக பணம் தேவைப்படுவதாலும், சமூகத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மற்றும் ஏழைகளின் நலத்திட்டங்கள் தேவைப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை வரையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது.
2021 ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2021 மார்ச் வரை மத்திய அரசுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.
இது மத்தியஅரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.