காசியாபாத்

த்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வயதான பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் நாய்க்கடி ஊசி போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  நாடெங்கும் ஏற்கனவே முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.   மார்ச் 1 முதல் 60 வயதை தாண்டியோருக்கும் 45 வயதை தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டமாகத் தடுப்பூசி போடப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் மூன்றாம் கட்டமாக 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   இதையொட்டி அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தகுதி உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  அதற்கிணங்க நாடெங்கும் சிற்றூர் உள்ளிட்ட அனைத்து இடங்களில் வசிப்போரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

அவ்வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள காண்ட்லா பகுதியில் சாம்லி என்னும் சிற்றூரில் மூன்று வயதான பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.  இவர்களில் ஒருவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.  இதையொட்டி அவர் தனக்கு கொரொனா தடுப்பூசி போட்ட விவர சீட்டுடன் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்டது தெரிய வந்தது.    அவருடன் சென்ற மூவருக்கும் இதே ஊசி போடப்பட்டதும் உடனடியாக் தெரிய வந்தது.  இந்த பெண்கள் அனைவரும் 60 முதல் 70 வயதானவர்கள் ஆவார்கள்.  விவரம் அறிந்த மாவட்ட நீதிபதி ஜஸ்ஜீத் கவுர் இந்த தவறு எவ்வாறு நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.   மாநிலத் தலைமை மருத்துவ அலுவலர் மூதாட்டிகளுக்கு ஊசி மாறியதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது என உறுதி அளித்துள்ளார்.