வங்கக்கடலோரம் அறிஞர் அண்ணாவின் அருகில் துயில் கொண்டிருக்கும் மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை..
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 97 பிறந்த நாள் ஜுன் 3ம் தேதியான இன்று நினைவு கூறப்படுகிறது. தமிழ் இருக்கும்வரை அவரது புகழும் இருக்கும். அவரது அரசியல் திறன், ஆளுமை வல்லமைகள் ஒரு பக்கம் புகழப்படும் அதேநேரத்தில் திரையுலகமும் அவரது புகழைப் பாடிக்கொண்டிருக்கிறது.
கலைஞரின் வருகைக்கு பிறகு அரசியலில் எப்படியொரு எழுச்சி உதித்ததோ அதே போல் தமிழ் திரையுலகிலும் அவரது வருகைக்கு பிறகு விடிவு காலம் பிறந்தது. புராண படங்கள் என்ற பெயரில் பாடல்களால் தமிழுக்கு ஓட்டும் இல்லாத உறவும் இல்லாத மொழியில் மழுங்கடிக்கப்பட்டு வந்த தமிழர்களின் மூளையை தமிழ் வசன நடை என்ற சலவைக்கு போட்டு அழுக்கு நீக்கி பளிச்சிடும் வகையில் புத்தம் புதிதாகவும், கூர் வாள்போன்றும் பட்டை தீட்டியவர் முத்தமிழிறிஞர் கலைஞர். அவரது வசனத்தில் துள்ளிக்குதித்து வந்த ’பராசக்தி’படம் தமிழ் சினிமாக்களில் அதற்கு முந்தைய காலகட்டம் வரை காட்டப்பட்டு வந்த அத்தனை மூட நம்பிக்கைகளையும், பெண்ணடிமை காட்சிகளையும் சுக்கநூறாக உடைத் தெறிந்தது.
’கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக…’ என நடிகர் திலகத்தின் சிம்ம குரலில் கலைஞரின் நெருப்பை போல அனல் கக்கிய பராசக்த்தியின் நீதிமன்ற வசனங்கள் ஒன்றுபோதும் கோடி பெறும். சமூக நீதி, பெண்ணடிமை, பகல் வேடதாரிகளின் தோலுரிப்பு என்று அந்த வசனங்களின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம். அதே வசனம் பின்னாளில் பல நடிகர்களுக்கு பயிற்சி வசனமாகி நடிகர்களாக அவர்கள் திரையுலகிற்குள் நுழைய நுழைவு சீட்டாகவும் இருந்தது.
கோயில்களில் சிலர் செய்யும் அட்டூழியங்களை அன்றைக்கே தீர்க்க தரிசனமாக காட்சிப்படுத்தி நெற்றிப் பொட்டில் உரைக்கும் வகையில் அவர் தீட்டிய வசனங்கள் இன்று நீதிமன்றங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
அதற்கு முன்பே ராஜகுமாரி. அபிமன்யூ படங்களுக்கு கலைஞர் எழுதிய வசனங்களுக்கு அவரை உரிமை கொண்டாட விடாமல் படத்தின் இயக்குனரே வசன உரிமைகளை எடுத்துக் கொண்டார். ’ராஜகுமாரி’ படத்தில் பணியாற்றிய போதுதான் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. அது 40 ஆண்டுகள் தொடர்ந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட அரசியல் பிளவுக்கு பின்னும் இருவரின் நட்பில் பிளவு ஏற்படவில்லை அவர்களை சுற்றி இருந்தவர் களுக்கு அது நன்கு தெரியும்.
வசனத்தில் மட்டும் கலைஞர் புதுமை புகுத்தவில்லை திரைக் கதையிலும் அவர் புகுத்திய புதுமைகள் புரட்சி படைத்தது. திரைக்கதையை எழுத்தும் போதே அருகில் எந்த கதாபாத்திரத்தை எப்படி காட்சிப்படுத்தப்படவேண்டும் என்று கார்டூனும் வரைந்து இயக்குனரின் வேலையை எளிமைப்படுத்துவார் .
’மந்திரி குமாரி’ படம் எம்ஜிஆருக்கு கிடைக்க காரணமாக இருந்து அவரை உயர்த்திவிட்ட கலைஞர்தான் ’பராசக்தி’ படம் மூலம் நடிகர் திலகம் என்ற கற்பக விருட்சத்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ் திரையுலகத்திற்கு நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரண்டு மகுடங்களை சூட்டிய கலைஞரே மற்றொரு மகுடமாகவும் திகழ்ந்தார். திரையுலக சிற்பி கலைஞரின் அரும்பணி அடுத்த மூன்று நான்கு தலைமுறைகளுக்கு தொடர்ந்தது.
23 வயதில் ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுத தொடங்கிய கலைஞரின் எழுது கோல் 80வயதையும் தாண்டி திரையுலகில் கோலோச்சியது. பாசக்கிளிகள், உளியின் ஓசை, கண்ணம்மா என அவரது வசனங்கள் ஒரு தொடர்கதையாகவே இருந்தது. வசனங்களில் நம்பிக்கை மையை நிரப்பி இருப்பார். குடும்ப கதையாக இருந்தாலும் மன்னர் கதையாக இருந்தாலும் காதல் கதையாக இருந்தாலும் சமூக நீதியை கண்டிப்பாக இடம் பெறச் செய்வார். கடைசியாக அவர் ’பொன்னர் சங்கர்’ படத்துக்கு வசனம் எழுதினார். அப்போது அவருக்கு வயது 87.
அறுபதுக்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு கதை வசனம் எழுதி இந்திய சினிமா வரலாற்றில் தமிழ் திரையுலகுக்கு ஒரு நிரந்தர இடத்தை பிடித்து தந்தார்.அந்த பாதை இன்று உலகளவில் விரிந்து பறந்திருக்கிறது. காலமாற்றத்துக்கு ஏற்ப அவரது வசன நடையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அதில் தமிழின் அழுத்தமோ, ஆழமோ கொஞ்சமும் குறையவில்லை.தமிழ் சினிமாவுலகின் வரலாற்றை யார் மீண்டும் எழுதினாலும் கலைஞரை விட்டு எழுத முடியாது.