புதுடெல்லி: மறைந்த முன்னாள் நிதியமைச்சரின் இறுதிச் சடங்குகள் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ, முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் நடைபெற்றன.
இதுகுறித்து கூறப்படுவதாவது; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி சனிக்கிழமை மரணமடைந்தார். இதனால், பல்வேறு தளங்களிலும் விரவியுள்ள அவரின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவரின் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாரதீய ஜனதாவின் மிக மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியில் செயல்தலைவர் ஜே.பி.நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் அடக்கம்.
எதிர்க்கட்சியினர் வரிசையில், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்யா சிந்தியா, கபில் சிபல் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரஃபுல் படேல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அருண் ஜெட்லியின் உடல், யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் என்ற இடத்தில் எரியூட்டப்பட்டது. அவரின் மகன் ரோஹன் தந்தையின் உடலுக்கு எரியூட்டினார்.