வாஷிங்டன்:
7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவில் குடியேற தடை மற்றும் அகதிகள் நுழைய தடை விதித்தது போன்ற அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அந்நாட்டு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக எழுதப்பட்ட திறந்த மடல் ஒன்று அமெரிக்காவில் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. இதில் நோபள் பரிசு பெற்ற 24 பேர் உள்பட 4 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். டிரம்பின் இந்த முடிவு மனிதாபிமானமற்றது. பயனற்றது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பாரபட்சமான முடிவு நாட்டின் பாதுகாப்பை சீரழிக்கும். தேச பாதுகாப்பு நோக்கத்திற்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பிசினஸின் பொருளாதார துறை பேராசிரியர் முகமது அக்பர்போர் என்பவர் இந்த புகார் கடிதத்தை முதலில் எழுதியுள்ளார். இதன் மூலம் ஆசிரியர்கள்& மாணவர்கள் இடையிலான உறவு பாதிக்கும் என்று ஈரானை சேர்ந்த அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவால் ஈரான் மாணவர்கள் தங்களது நாட்டிற்கு செல்ல முடியாமலும், திரும்ப வர முடியாமலும் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த வாரம் கூட பல மாணவர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் எப்படி திரும்பி வருவார்கள். இங்கு தங்கி பயிலும் மாணவர்களை பார்க்க வரும் பெற்றோர்களி நிலமை கேள்விகுறியாகியுள்ளது என்றும் அந்த பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், செல்லத்தக்க விசா வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களும் தற்போது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று இதே பல்கலைக்கழகத்தின் மற்றொரு பேராசிரியர் பால் மில்க்ரோம் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை டிரம்ப் நிராகரித்துள்ள அவர், மென்மையான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.