மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கானகாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் பல முக்கியமான சாலைகள் மூடப்பட்டன. ஏராளமான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் சுமார் 13 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அங்கிருந்து மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். எதிர்பார்த்ததை விட அதிகமான மழை பெய்ததாகவும், இதனால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறி உள்ளார்.