புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று, அடித்தட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில், நாட்டின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்வதாக விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் ஜக்தீப் சோக்கார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சொத்து மதிப்பு கடந்த 2004ம் ஆண்டு 280639 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்ததென்றால், அந்த சொத்து, 2019ம் ஆண்டில் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு 144 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது. அது இந்த 2019ம் ஆண்டில் 1.57 பில்லியன் என்ற பிரமாண்ட அளவாக உயர்ந்துள்ளது.

அதேபோன்று நாட்டின் ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு கடந்த 2015ம் ஆண்டு 164.6 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அது தற்போது 2.13 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.