சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலையொட்டி,  “தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டிச.10 முதல் விருப்ப மனு அளிக்கலாம்”  அ.ம.மு.க  தலைவர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே தொடரும் நிலையில்,   அதிமுக – பாஜக கூட்டணி  ஏற்பட்டுள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய் தனது தலைமையில் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், தேமுதிக, பாமக உள்பட சில கட்சிகள் இதுவரை எந்த அணியுடன் கூட்டணி என்பதை தெரிவிக்காமலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில்,   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கொடுக்க இறுதி நாள் ஜனவரி 3ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விருப்ப மனு கட்டணமாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரமும், புதுச்சேரியில் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.