சென்னை: தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புபவர்களுக்கு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என தமிழ்நாடு அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக வரும் 5ந்தேதி முதல் சென்னையின் பிரபலமான கபாலீசுவரர் மற்றும் வடபழனி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்து கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோன்ற அர்ச்சனைகளை அங்கு பூஜை செய்பவர்கள் சமஸ்கிருதத்தில் கூறுவது உண்டு. சில பகுதிகளில் தமிழில் அர்ச்னை செய்யும் பணிகளும் நடைபெற்ற வருகிறது. சமஸ்கிருதத்தில் அர்ச்சை செய்வது, பக்தர்களுக்கு புரியதாது என்பதில், தமிழிலேயே அர்ச்சை செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.
இதை தற்போதைய திமுக அரசு, அதிகாரப்பூர்வமாக அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வருகிற 5-ந் தேதி (வியாழன்) முதல் திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்குவதாக தெரிவித்து உள்ளார்.
சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடைபெறும் என்றும், இந்த கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய விரும்பினால், அவர்களின் விருப்பத்திற்கேற்ப இனி தமிழில் அர்ச்சை செய்யப்படும். இதற்காக கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரும், செல்போன் எண்ணும் அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளதாகவும், பக்தர்கள் அந்த எண்ணுக்கு அழைத்து விரும்பும் சன்னதியில் விரும்பும் தெய்வங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த வசதி, தமிழகத்தில் உள்ள முதுநிலை கோவில்களான 47 கோவில்களில் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது என்றும், கோவில்களில் குறைகள் இருந்தால் ஆன்லைனில் பக்தர்கள் புகார் செய்யலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை புகார்கள் அனைத்தும் இணைகமிஷனர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.