தாநகர், அருணாசலப் பிரதேசம்

ருணாசல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் பல பிரபலங்கள் மீண்டும் இணையத் தொடங்கி உள்ளனர்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் அருணாசலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெறலாம் என கூறப்படுகிறது. தற்போது அங்கு பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014 மக்களவை தேர்தல் முடிந்த பிறகு அருணாசல பிரதேசத்தில் உள்ள பல கட்சி பிரபலங்கள் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் கடந்த 2014 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்த போதிலும் உட்கட்சி குழப்பத்தினால் கட்சி தாவல் ஏற்பட்டது. அருணாசலப் பிரதேச மாநிலத்தை பொறுத்த வரை கட்சித் தாவல் மிகவும் அதிக அளவில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் பாஜக நன்மை அடைந்ததாக அவர்கள் கூறினர்.

தற்போது தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் பல அரசியல் பிரபலங்கள் மீண்டும் கட்சி மாறி வருகின்றனர். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி இதனால் பயன் அடைந்து வருகிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேகோங் அபாங் இந்த மாதம் 15 ஆம் தேதி காங்கிரசில் இணைந்தார். இவர் கடந்த 2014 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் ஆவார்.

அவருடைய விலகலுக்குப் பிறகு பாஜக கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சியின் இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணதுள்ளனர். அவர்களை தவிர மேலும் இரு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக வின் மாநில செயற்குழு உறுப்பினரும் கட்சி விலகி காங்கிரசில் இணைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் காங்கிரசில் இருந்து முதலில் விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.