சென்னை:

ள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதம்  இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்  தேர்தலை, மக்கள் தேர்ந்தெடுக்காமல்,  மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பார்கள் என அவசரச் சட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு பெற்றவர்கள், அதற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிவிப்பில்,  மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் தலைவர் பதவியை தவிர கவுன்சிலர் பதவிக்கு நவ.27 ஆம் தேதி வரை திமுகவினர் விருப்பமனு தரலாம் என்றும் அறிவித்து உள்ளது.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதிமுக பணத்தை திரும்ப தருவதாக நேற்று அறிவித்த நிலையில், இன்று திமுகவும்  அறிவித்துள்ளது