சென்னை: டிசம்பர் 4-க்குள் SIR படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளர்களின் பெயர் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். அப்படி கொடுக்காதவர்கள் பெயர்கள் டிசம்பர் 9ந்தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறது என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதில், , ‘வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த பணியை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க டிச.4 வரை காத்திருக்காமல், வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிச.9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டு படிவங்களுக்கு மிகாமல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR-ன் முக்கிய அறிவுறுத்தல்கள்
மேலும், ‘2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில், டிசம்பர் 4-க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயர் டிச.9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
அப்படி கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
உரிமை கோரல் மற்றும் மறுப்புரை காலம் டிச.9 – ஜன.8 (2026) வரை நடைபெறவுள்ளது.
இக்காலகட்டத்தில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அறிவிப்புக் கட்டம் டிச.9 – ஜன.31 வரை நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அந்த வகையான வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விசாரணை நடத்தப்படும். வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரையில் பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7 ஆம் தேதியன்று வெளியிடப்படும்”.
இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது! இந்திய தேர்தல் ஆணையம்