சென்னை: மணநல சிகிச்சைக்கு வந்தவர்கள் மணமக்களாக மாறி மனநல காப்பக கோவிலில் இன்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த சிறப்பு மிக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்த மகேந்திரன்-தீபா ஆகியோரின் திருமணம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது. மனநல காப்பக மருத்துவர்கள் , ஊழியர்கள் , நண்பர்கள் என அனைவரும் இணைந்து, இந்த காதல் மணத்தை வெற்றிகரமான நடத்தி, காதலர்களை இணைத்து வைத்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தனர்.

சென்னையின் அடையாளங்களில் ஒன்று   அரசு கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம். இது சுமார் 200 ஆண்டு பழமையானது. இந்த காப்பக்கத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்களில்  இருவர்கள், சிகிச்சை குணமடைந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட காதல் காரணமாக, இன்று அந்த காதல் ஜோடிக்கு, காப்பகத்தில் உள்ள கோவில் வளாகத்திலேயே விமரிசையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு உள்ளது. மகேந்திரன் – தீபா என்ற காதல் ஜோடி இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ள நிலையில்,  அவர்கள் தங்குவதற்கான வாடகை வீடு உள்பட தேவையான பொருட்கள் மனநல காப்பக மருத்துவர்கள் , ஊழியர்கள் , நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு   உள்ளது.

சென்னையை சேர்ந்த  எம்.பிஃல் பட்டதாரியான 42 வயதான மகேந்திரன் என்பவர் மனநலப் பாதிப்பு காரணமாக இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அதுபோல,  வேலூரை சேர்ந்த 36 வயதான ஆசிரியையான  தீபாவும் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும், தந்தை இறந்த சோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, சிகிச்சைக்காக   கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கினர்.

இவர்களுக்கு அங்குள்ள  மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அளித்த தொடர் சிகிச்சையின் பலனாக, அவர்கள்  மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து விடுபட்டனர். இதையடுத்து,  இருவரும் அங்குள்ள Care centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  மகேந்திரன் காப்பகத்தின் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.  தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் காப்பக விதிமுறைகளின்படி அவர்களின் காதலுக்கு சிவப்பு கொடி காட்டப்பட்டது. ஆனால், அவர்களின் தீவிரமான காதலை அறிந்த காப்பக நிர்வாகம், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, இருவீட்டார் சம்மதம் பெற்றனர். அதைத்தொடர்ந்து, இன்று காதல் ஜோடிகளுக்கு வெற்றிகரமான  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  இந்த சம்பவம் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.