புதுச்சேரி; பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்ட மாக விமர்சித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரியின் செயலையும் கடுமையாக விமர்சித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பேரறிவாளன் விடுதலைக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது மனவேதனையை அளிக்கின்றது. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களின் விடுதலையை கொண்டாடு வது அவர்களின் வக்ரபுத்தியை காட்டுகிறது என்று காட்டமாக விமர்சித்தார். மேலும், ராஜீவ்காந்தி கொலையாளிகளை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், பேரறிவாளனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டி பிடித்து வரவேற்றாரே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தெரிவிக்க விரும்பவில்லை என மறுத்த நாராயணசாமி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு சரியல்ல என்று விமர்சித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், முன்னாள் பாரதப் பிரதமரின் கொடூரக்கொலை செயலில் ஈடுபட்ட பேரறிவாளன் விடுதலையில் உறுதியான உணர்வுப்பூர்வமான நிலையை எடுக்காமல், ஒருபுறம் முற்றுகைப் போராட்டம் என்றும், மறுபுறம் பேரறிவாளனின் விடுதலையை பாராட்டும், கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்து இருப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது என்று கேஎஸ் அழகிரி தலைமையையும் விமர்சித்தார்.
மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சினையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுய நலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா என்று தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு முழுவதும் திமுகவினர், பேரறிவாளன் விடுதலையை சுவிட் கொடுத்து கொண்டாடி வரும் நிலையில், நாராயணசாமியின் விமர்சனம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.