டில்லி

கொரோனாவை கட்டுப்படுத்த வீட்டை விட்டு வெளியே வருவோர் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

நாடெங்கும் கடந்த இரு வாரங்களாக கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது.   நேற்று வரை இந்தியாவில் 3.44 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 9925 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.  இன்று பாதிப்பு குறைவான மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் மோடி, “நாட்டில் கொரோனா தொற்று பரவுதற்கு முன்னால் இருந்தே இந்தியா முன்னெச்சரிக்கையுடன் இருந்தது.    ஊரடங்கு முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.  இதனால் தான் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா சாதிக்க முடிந்தது.

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் பெரிய அளவில் பாதிக்கவில்லை.   இந்தியா  ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புக்களை பெருமளவில் தடுத்துள்ளது.   இந்தியாவில் மீட்பு விகிதம் 50% விட அதிகரித்துள்ளது.  கொரோனா பரவுதலை தடுக்க வீட்டை விட்டு வெளியே வருவோர் அனைவரும் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும்.

இனி வர உள்ள நாட்களில் இந்தியாவில் சில மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெற உள்ளன    உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தியப் பொருட்கள் உலகச் சந்தையில் இடம் பிடிக்கவும் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  சிறு குறு தொழில்கள் மற்றும் விவசாயத்துக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.