கொல்கத்தா
நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் நாகாலாந்து மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு காரணமாக நடத்தப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் இந்த சம்பவத்தால் அங்கு ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
“நாகாலாந்து சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது. தங்களது உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை வேண்டும். அதே போலப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்”
என டிவிட்டரில் பதிந்துள்ளார்.