சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம் என பாஜகவுக்கு அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பதில் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அடுத்தஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கி உள்ளன. அதுபோல கூட்டணி தொடர்பாகவும், தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் ரகசிய பேச்சுவார்த்தைகள், பேரங்கள் நடைபெற்று வருகின்றன.

அதிமுகவிலும், முதல்வர் வேட்பாளர் யார் என கடந்த சில மாதங்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த 7ந்தேதி இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளர் காரணமாக அதிமுகவில் பிளவு ஏற்படும், அதன்மூலம் அரசியல் லாபம்அடையாளம் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாஜகவுக்கு, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு பேரிடியாக விழுந்தது.

இதனால்,  பாஜக தலைவர்கள் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, ஏடாகூடாக பதில் அளித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் என்பதை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.  மேலும், அதிமுக- பாஜக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது, வரும் தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என கொளுத்தி போட்டார். இதனால்,  அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. அதிமுக அமைச்சர்களும், பாஜக தலைவர்களின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள், அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்  பதில் அளிக்காமல் அங்கிருந்து நழுவினார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடியை முதல்வராக ஏற்பதில் பாஜகவுக்கு என்ன சிக்கல் என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி,  பாஜகவின் நடவடிக்கைக்கு அதிரடியாக பதில் கூறினார்.

அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணியில் இருக்க முடியும் என பாஜகவுக்கு பதிலடி கொடுத்தார்.  மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, தமிழகத்தில், அதிமுக ஆளும்கட்சி,  அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, கூட்டணியில் தொடர முடியும், இல்லையேல் கூட்டணியில் தொடர முடியாது என்றும், சசிகலா கட்சிக்குள் வருவதற்கே இடமே இல்லை என்றும் அதிரடியாக கூறினார்.

அதிமுக துணைஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர், ஜெ.மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை சசிகலா கைப்பற்ற முயற்சி செய்தபோதே, அவருக்கு எதிராக குரல் கொடுத்தவர், பின்னர் ஓபிஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபோது, அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.