உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் இரண்டாவது அலையில் இருந்து காத்துக்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய பிரதமர் மோடி நாம் கொரோனாவை வென்றுவிட்டதாகக் கூறி கைகொட்டி ஆரவாரம் செய்தார், இப்போது இரண்டாம் அலை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது அவரது நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்துவதாக பிரசார் பாரதியின் முன்னாள் இயக்குநர் ஜவஹர் சிர்கார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை சில ஆண்டுகள் அருகில் இருந்து பார்த்த அனுபவத்தைக் கொண்டு இதை நான் தெரிவி்கிறேன் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில் விவரித்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பெரும்பாலும் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறையை மையமாக கொண்டது. அதை அமெரிக்காவின் ஒற்றை அதிகார முறையை தழுவி அனைத்து கட்டுப்பாட்டையும் மத்திய அரசிடம் கொண்டு சென்ற கோமாளித்தனமான நடவடிக்கையால் தான் நாடு இன்று இத்தகைய பேரழிவை கட்டுப்படுத்த முடியாமல் தினறிவருகிறது.

அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றதையடுத்து மக்கள் தங்களுக்கு முழுஅதிகாரம் வழங்கிவிட்டதாக நினைத்து பல்வேறு பயனற்ற மாற்றங்களை மோடி அரசு செய்து வரும் நிலையில், அது.தவறாக போகும் பட்சத்தில் அதை திருத்திக்கொள்ள மறுப்பது வேதனைக்குறியது.

தனது அமைச்சரவை முடிவுக்கோ, தனது அமைச்சரவை சகாக்களின் கருத்துக்கோ முக்கியத்துவம் அளிக்காமல், தன்னிச்சையாக அரசுத் துறை செயலாளர்களை கொண்டு செயலாற்றி வருகிறார் மோடி. இது அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் பாகுபாட்டை ஏற்படுத்தியதோடு, முழுமனதுடன் அவர்கள் செயலாற்றுவதற்கு தடையாக அமைந்தது.

ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு பிரதம மந்திரியின் திட்டம் என்று பெயர் மாற்ற்றுவது ஒன்றையே கொள்கையாக செய்துவந்தனர்.

கொரோனா பரவலை சமாளிக்க மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முககவசம் மற்றும் தனிமனித பாதுகாப்பு கவசம் வாங்குவதற்கும் அதுகுறித்து முடிவெடுப்பதற்குக் கூட சுகாதார துறை அமைச்சருக்கு உரிமை வழங்கப்படவில்லை.

மக்களின் நலன் மீது அக்கறை உள்ள உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசி, ஆக்சிஜன் உற்பத்தி, அவைகளுக்கான விலை நிர்ணயம் உள்ளிட்டவற்றை பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு செயலாற்றி வந்த நிலையில், விலைமதிப்பற்ற தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்திவிட்டு, இப்போது தான் விழித்திருக்கிறது இந்திய அரசு.

தேவை மற்றும் விநியோகம் குறித்த ஒரு அடிப்படை கணக்கு கூட போடத்தெரியாத அரசாக விளங்கும் இந்த அரசு, உலகநாடுகளின் மருந்துப் பெட்டகமாக இந்தியா விளங்குகிறது என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதில் கவனம் செலுத்தினார்கள்.

மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து, அனைத்து அதிகாரத்தையும் மத்தியில் குவித்ததன் பலனை இந்த பேரழிவின் மூலம் மத்திய மோடி அரசு சந்த்தித்து வருவதாக அந்த கட்டுரையில் ஜவஹர் சிர்கார் கூறியுள்ளார்.