சென்னை: தமிழ்நாட்டில் அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக கூறி வரும் நிலையில், தமிழகத்திற்கு, 26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கிடையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 10ஆண்டுகளாக தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்து வந்த நிலையில், கடந்தசில மாதங்களாக மீண்டும் மின்வெட்டு தலைதூக்கி உள்ளது. கிராமப்பு றங்களில் தினசரி மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகஅரசு மின்தடை இல்லை என்று கூறி வருகிறது. அதே வேளையில், நிலக்கரி பற்றாக்குறை என்றும் கூறி வருகிறது. கோடைக் காலத்தை சமாளிக்கும் வகையில், என்பதால் மின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதனால், அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்ய, அதிக நிலக்கரி தேவைப்படுகிறது.எனவே, தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய அரசிடம், மின் வாரியம் வலியுறுத்தி வருகிறது. தற்போதைய நிலையில், ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 5 கோடி கிலோவுக்கு குறைவாக நிலக்கரி அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழக மின் வாரியத்தின், 4,320 மெகா வாட் திறன் உடைய, ஐந்து அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்ய, தினமும் 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. இந்த நிலையில் மேலும் 26 கோடி கிலோ நிலக்கரியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஹின்குலா உட்பட, ஐந்து சுரங்கங்களில் இருந்து, தமிழக மின் வாரியத்திற்கு, 26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலக்கரி, ஒடிசாவில் உள்ள மத்திய அரசின், ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து அனுப்பப்படும் என்றும், அந்த நிலக்கரியை, தமிழக மின் வாரியம், சொந்த செலவில் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாளொன்றுக்கு 1050 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முக்கிய மூலப்பொருளான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலக்கரி போதுமான அளவு கிடைக்காததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் 5 அலகுகளில் ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.