சென்னை: தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையை விற்பனை செய்ய உள்ளதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து உள்ளது.

வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி பகுதி மீளவிட்டான் என்ற இடத்தில், தாமிரத்தை உருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படுத்தியது. இந்த ஆலையில்  வெளியாகும் நச்சுப்புகை மற்றும் ஆலையில் இருந்து வேளியேற்றப்படும் கழிவுநீர் போன்றவற்றால், அந்த பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளானார்கள். அதனால்,  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராடத் தொடங்கினர். இந்த போராட்டம் கடநத 2018ம் ஆண்டு உச்சம் பெற்றது.  2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த 100வது நாள்  போராட்டம் வன்முறைக்களமானது. போராட்டத்தை அடக்க தமிழ்நாடு காவல்துறை நடத்திய  காட்டுமிராண்டித்தனமான  தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,2018,மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்று, வேதாந்தாவின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்து விட்டது.

இந்த நிலையில்,தூத்துக்குடியில் உள்ள தங்களது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை  வாங்க விரும்புவோர் ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி பகுதி மக்களின் எதிர்ப்பு, தமிழக அரசின் அறிவிப்பு, உச்சநீதிமன்றம் கைவிரிப்பு போன்றவற்றால், ஆலையை தொடர்ந்து நடத்த வாய்ப்பில்லை என்பதால், ஆலையை விற்பனை செய்யும் முடிவை வேதாந்தா நிறுவனம் எடுத்துள்ளது