டில்லி:

தூத்துக்குடியில், அமைதி வழியில் போராடிய  மக்கள்மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியானர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், 13 கொலைகளை செய்துள்ள தமிழக காவல்துறைமீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சிபிஐ  விசாரணை நடத்த வேண்டும் என்றும்,  தூத்துக்குடியில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை என்றும் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளார்.

இந்த மனு ஒருசில நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.