அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், தஞ்சாவூர் மாவட்டம்

அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் “முருகன், கந்தன், கார்த்திகேயன்” என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார்.

மூத்தவனுக்கு “மூத்த திருநாவுக்கரசு,” இளையவனுக்கு “இளைய திருநாவுக்கரசு” என்று. தன்னை விட, தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார். மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை “அன்னப்பிரசானம்” என்பர். கிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தழிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.

அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். குழந்தைகளுக்கு அம்புலியை காட்டி சோறூட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல. அதில் ஆன்மிகக்காரணமும் புதைந்து கிடக்கிறது என்பதால்தான்.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்