சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.
இத்தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம். திருவொற்றியூர் கலிய நாயனாரின் அவதாரத் தலம். சுந்தரர் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்த தலம். பட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.
இத்தல இறைவனான ஆதிபுரீஸ்வரர், ஒரு சுயம்பு புற்று லிங்கம் ஆவார். ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாகத் தரிசனம் செய்ய இயலும். அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். நடப்பு ஆண்டு 2018ல் 22.11.2018 வியாழக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 24.11.2018 சனிக்கிழமை இரவு கவசம் மூடப்படும்.