சென்னை,

ன்று அடையாறில் திறக்கப்பட்ட நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசியல் கட்சியினர், திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், எல்லோரையும் ஒரே மேடையில் அமர வைத்த விழா, நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழா, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா என்று கூறினார்.

அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார். அதன்பின்னர், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிவாஜி குடும்பத்தினர் மட்டுமின்றி  நடிகர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகுமார், விஷால், கார்த்தி, நாசர், ராதிகா  உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

இந்த விழா மிகவும் மகிழ்ச்சிகரமானது. எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். கமலும், ரஜினியும் ஒன்றாக இருக்கிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா. சரத்குமாரும், நாசரும் அருகருகே இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு என்றார்.

மேலும்,  கமலுடன் அமைச்சர் ஜெயக்குமார் கைகுலுக்குகிறார். எல்லோரது முகத்திலும் புன்னகை தவழ்கிறது என்றும்,  நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் அழைத்ததும் திறப்பு விழாவுக்கு துணை முதல்வரும் வந்து இருக்கிறார் என்றார்.

நடிகர் திலகத்தின் பெருமையை அவரது குடும்பத்தினர் கட்டிக்காத்து வருகிறார்கள். அவரது வசனத்தை பேசிதான் பலர் நடிப்பதற்கே வந்தனர். பராசக்தி வசனத்தை பேசிதான் நான் எஸ்.பி.முத்துராமனிடம் வாய்ப்பு கேட்டேன். நடிப்பு துறைக்கு வருபவர்களுக்கு பாலபாடமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன் என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார்,

இது மகிழ்ச்சியான விழா. இந்த இடத்தை கொடுத்து மணிமண்ட பம் கட்டிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அமைச்சர்கள் படைசூழ மண்டபத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த மண்டபம் வெறும் மண்டபமாக இல்லாமல் கலை உலகின் சிறப்புகளையும், நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து நிகழ்வாகவும் அமைய வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் விஜயகுமார், கலை என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் நடிகர் திலகம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் புகழப்படுவர் என்றார்.