வாஷிங்டன்:
அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சார்பில் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்களுக்கு ஹெச்1& பி விசா தகுதி பெற்றவர்கள் என்ற சிறப்பு சலுகை வழங்குவதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஹெச் 1 பி விசா பெறுவதற்கான நடைமுறையை டிரம்ப் நிர்வாகம் மேலும் கடுமையாக்கி இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதன் மூலம் அனைத்து ப்ரோகிராமர்களும் தங்களது திறனை வெளிப்படுத்தும் வகையில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை விசா பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். இந்த அறிவிக்கை அமெரிக்காவில் குடியுரிமை மற்றும் குடியேற்ற துறையில் விசா அனுமதிக்கும் முடிவை எடுக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுக்காக வெளியிடப்ப்டடுள்ளது.

1998&99 மற்றும் 2000&01ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் நலச் சட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிப்படி கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் பணிகளுக்கு ‘சிறப்பு பணி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த புத்தகத்தில் ஆரம்ப கட்ட ப்ரோகிராமர்களும் சிறப்பு அந்தஸ்த்து கொண்டவர்களாக கருதப்பட்டுள்ளனர். இதில் பணியின் அளவுகோள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

புதிய அறிவிப்பின் மூலம், ஒரு நபர் தனது விண்ணப்பத்தில் தனது சிறப்பு தன்மையையும், பணியின் அடிப்படை தகவல்கள் அறிந்திருப்பதை நிரூபிக்க வேண்டும். அதோடு நிறுவனத்தில் இலக்கை அடையும் வகையில் தகவல் தொழில்நுட்ப திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்களாக திறன் இருந்தால் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

இது போன்ற தகுதிகள் இருந்தால் தான் சிறப்பு பணியாக கருதப்படும் என்று புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியர்களுக்கான ஹெச் 1பி விசா முறையில் மாற்றம் இருக்காது என்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிதாக இந்த உத்தரவை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இந்திய கம்ப்யூட்டர் வல்லுனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.