புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர், சுமார் 1 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி, மதநல்லிணக்கத்துக்கு அச்சாரமிட்டு, தமிழகம் மதசார்பற்ற மாநிலம் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார். அவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளந்திரான்பட்டு என்ற கிராமத்தில் கூத்தாளம்மன் என்ற சக்திவாய்ந்த கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் வைகாசி திருவிழாவுக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபடுவது வழக்கம்.
கோவில் அமைந்துள்ள இடம் சிறியதாக இருப்பதால், திருவிழாக்காலங்களில் கூட்ட நெரிசலால் பக்தர்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கலிபுல்லா என்பவருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. கோவில் திருவிழாவின்போது, கலிபுல்லா அனுமதியுடன் இந்த இடத்தில்தான் அன்னதானம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதை பல ஆண்டுகளாக பார்த்து வரும் கலிபுல்லா, கோவில் அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் நிலத்தை கூத்தாளம்மன் கோவிலுக்கே தானமாக வழங்கி உள்ளார். இந்த அரிய நிகழ்வு, அந்த பகுதி கிராம மக்கள் ஒன்று கூட, இந்தப் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து கூறிய கலிபுல்லா, ஆண்டுதோறும் திருவிழாவின்போது மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி துன்புற்று வருவதைக் கண்டு மனம் நொந்ததாகவும், ஆனால், கோவிலுக்கு அந்த நிலத்தை தானமாக கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தேன்… ஆனால், கோவில் நிர்வாகம் தரப்பில் தன்னிடம் வந்து பேசுவார்கள் என எதிர்பார்த்தேன்.. ஆனால், அவர்கள் கேட்க தயங்குவதுபோல தெரிந்தது. இதனால், கோவிலுக்கு அருகில் உள்ள அந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் கோவிலுக்கே தானமாக எழுதி கொடுத்திட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியவர், நாம் போகும் போது எதையும் நாம கொண்டு போகப்போறதில்ல. முடிஞ்ச அளவுக்கு நல்லது செய்வோம் என்றார்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த கலிபுல்லாவை அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி, இந்த தகவலை கேள்விப்படும் அனைத்து தரப்பினரும் வாழ்த்தியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.