சென்னை:

நிலவுக்குச் சென்ற சந்திரயான் விண்கலத்தின் தகவல் தொடர்பு  துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்,
இது தோல்வி என்று அர்த்தமல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர்  கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

சந்திரயான் – 2 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங் களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரோவின் ஆர்பிட்டர் இயங்கி வருவதால், அதன்மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இஸ்ரோவின் முயற்சி குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், இது தோல்விக்கு சமமானதல்ல. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு கற்றல் வளைவு இருக்கும். இது, அந்த விலைமதிப்பற்ற கற்றல் தருணம். நாங்கள் விரைவில் சந்திரனுக்கு வருவோம், #ISRO க்கு நன்றி. இஸ்ரோவை நாடு நம்புகிறது மற்றும் பாராட்டுகிறது என்று பதிவிட்டு உள்ளார்.

இந்த நிகழ்வுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இஸ்ரோ வுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.