சேலம்,

நாட்டிலேயே முதன்முதலாக சேலத்தில் 2வது மாடியில் கால்பந்து மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில், செயற்கை புள்வெளி மூலம் அமைக்கப்பட்டுள்ள  இந்த மைதானம்  விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சென்னைக்கு அடுத்த படியாக விளையாட்டுப்போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது சேலம் மாவட்டம்.

பாராள ஒலிம்பிக்கில் தங்கம் சென்ற மாரியப்பன் சேலத்தை சேர்ந்தவர். அதேபோல்  ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் இடம்பிடித்த நடராஜன் சேலம் அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்தவர்.

கால்பந்து விளையாட்டு வீரர்களின் ஆசைக்கேற்ப சேலம் ஐந்து ரோடு ஜங்ஷன்  அருகே 2 -வது மாடியில் கால்பந்து விளையாட்டரங்கம்  ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உள்  விளையாட்டரங்கம், செயற்கை புல்வெளியுடன், கால்பந்து கூட்டமைப்பு விதிகளுக்குட்பட்டு சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மைதானத்தில்  தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை உருவாக்க பயிற்சியளிக்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர் செளகத் அலி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மைதானம் சேலம் பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டி உளளது.

இந்த உள்விளையாட்டு கால்பந்து மைதானத்தில்,  சர்வதேச கால்பந்து சம்மேளமான பிபா அமைப்பின் அனுமதி பெற்று, தலா 5 பேர் கொண்ட அணிகள் விளையாடும் வகையில் இங்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச அளவிலான போட்டிகள் இந்த  மைதானத்தில் நடைபெறுவதால், இந்த மைதானம் குறித்து சர்வதேச அளவில் புகழ் பரவி வருகிறது.

இந்தியாவில் சென்னைக்கு அடுத்தப்படியாக சேலத்தில் புட்சால் கால்பந்து போட்டி 5 வீரர்களுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் ஆட்டத்தில் காவல் துறையை சேர்ந்த வீரர்களும் தேசிய கால்பந்து வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினர்.

சேலத்தில் இது போன்ற நவீன விளையாட்டு மைதானங்கள் தங்களுக்கு வரபிரசாதம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் கால்பந்து வீரர்கள்.