திருவெண்டுறை வெண்டுறைநாதர் ஆலயம்
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியாக 10 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்த,காவிரி தென்கரை தலங்களில் 112 வது தலமாகவும் தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் 176வது தலமாகவும் விளங்கும் சிவாலயம் இது.
பெரிய கோபுரம் உள்ள கிழக்கு நுழைவு வாயிலும், கோபுரம் இல்லாத மேற்கு நுழைவு வாயிலும் கொண்டு ஒரு பெரிய மதிற்சுவருடன் இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கணபதி சந்நிதியும், வடமேற்கு மூலையில் முருகப்பெருமானின் சந்நிதியும் உள்ளது. கருவறை முன் உள்ள நடு மண்டபத்தில் விநாயகரும், ஒரு நந்தியும், வடபுறம் தெற்குப் பார்த்த தனி சந்நிதியில் சோமாஸ்கந்தர், நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் உள்ளனர். இறைவி வேல்நெடுங்கண்ணி அம்மைக்குத் தனி விமானத்துடன் தெற்குப் பார்த்த தனி சந்நிதி உள்ளது.
இறைவன், இறைவி ஆகிய இருவரின் சந்நிதிகளையும் இணைக்கும்படி கருங்கல்லால் கட்டப்பெற்ற வேலைப்பாடு மிக்க தூண்களுடன் கூடிய அழகிய வெளி மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் தேவார மூவர், பிருங்கி முனிவர் ஆகியோரின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு தூணில் நான்கு யுகங்களைக் கண்ட ஆஞ்சநேயரும் உள்ளார். கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்திலுள்ள மண்டபத்தில் பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் ஆகியோரைக் காணலாம். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிட்சாடணர் உருவச்சிலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
அர்த்தநாரீஸ்வரர் திருமேனி விசேஷமானது. மாதொரு பாகனின் வாகனத்தை உற்று நோக்கினால் இறைவன் உருவம் உள்ள பகுதியில் ரிஷப வாகனமாகவும், இறைவியின் உருவம் உள்ள பகுதியில் சிம்ம வாகனமாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.
ஆலயத்தின் உள்ளே தலமரமான வில்வ விருட்சம் உள்ளது. ஆலய தீர்த்தம் பிரம தீர்த்தம் ஆலயத்திற்கு வெளியே வடகிழக்கில் உள்ளது.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சிவபெருமான் யமனை உதைத்தது, திரிபுரம் எரித்தது, இராவணன் கயிலை மலையை எடுத்தது, திருமால் பிரம்மா அடிமுடி காண முடியாமல் அரிதாய் விளங்கியது முதலிய புராண வரலாறுகள் இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.