பாசுபதேஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன், வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக் கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். “அந்த பன்றியை யார் கொன்றார்கள்?” என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது.
இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். “இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது”. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராதமூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன.
பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது. தற்போது மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் சித்திவிநாயகர், சோமஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதியில் நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் சுற்றுப்பகுதியில் உள்ள நர்த்தன விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, இந்திர மயில் மீதமர்ந்த முருகன் ஆகியன அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.